

சென்னை,
மத்திய அரசின் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
2010-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இந்த சட்டவிதி பொருந்தும். 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் இந்த காலக்கெடு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. அரசு கொடுத்த காலக்கெடு கடந்த மாதத்தோடு முடிவடைந்த நிலையில் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.
சம்பளம் நிறுத்தம்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சம்பளம் வழங்காமல் நிறுத்திவைத்துள்ளது.
விரிவான அறிக்கை
ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் பெயர், அவரது தகுதி, நியமன தேதி உள்ளிட்டவைகள் விரிவான அறிக்கையாக தொகுக்கப்பட்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், செயலாளர்கள் மற்றும் முதல்வர்கள் மூலம் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்கள் வேலாயுதம், சித்ராதேவி ஆகியோர் 15.6.2011 அன்று நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல அரசு உதவிப்பெறும் பள்ளிகளும் தங்களுடைய நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் ஜூன் 1-ந் தேதி பள்ளி திறப்பதற்கு முன்னர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் வரும் கல்வியாண்டில் பணியில் நீடிக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.