ரூ.200 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்துக்கு 'சீல்' - முக்கிய ஆவணங்களும் பறிமுதல்

ரூ.200 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்துக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ‘சீல்’ வைத்தனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.200 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்துக்கு 'சீல்' - முக்கிய ஆவணங்களும் பறிமுதல்
Published on

சென்னை பெரம்பூர் பாரதி சாலையில் 'தி பரஸ்பர சகாயநிதி பெரம்பூர் லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இந்த நிதி நிறுவனத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக சேர்ந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை என சுமார் ரூ.200 கோடிக்கு வைப்புத் தொகையாகவும், சிறுசேமிப்பு திட்டத்திலும் சேர்ந்து பணம் கட்டினர்.

ஆனால் அவர்களுக்கு வைப்பு தொகைக்கான வட்டியும் சரிவர தராமல், கட்டிய பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி விட்டனர். இதனால் பணம் கட்டி ஏமாந்த சுமார் 400 பேர் இந்த மோசடி குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் மகேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுகுணா மேற்பார்வையில் 7 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் சோதனை செய்தனர்.

அங்கிருந்த 7 கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதுபற்றி அறிந்ததும், அந்த நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள், அங்கு குவிந்தனர். இதனால் செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிதி நிறுவன கட்டிடம் 3 மாடிகளை கொண்டது. தரை தளத்தில் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு பெட்டகம், முதல் மாடியில் அலுவலகம், 2-வது மாடியில் ஓய்வறை, 3-வது மாடியில் காவலாளிகள் தங்கும் அறை உள்ளது.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 3 மாடிகள் கொண்ட நிதி நிறுவன கட்டிடத்தை பூட்டி 'சீல்' வைத்தனர். முன்னதாக அங்கு தங்கி இருந்த காவலாளிகள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் உடைமைகளையும் வெளியே எடுத்து வைத்தனர். அப்போது பெரம்பூர் தாலுகா வருவாய் ஆய்வாளர்கள் மணிமேகலை, முத்துக்குமாரசாமி ஆகியோர் இருந்தனர்.

இந்த நிதி நிறுவனத்தில் 21 பேர் ரூ.1 கோடி வரை கட்டி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் முதியவர்கள் என கூறப்படுகிறது. நிதி நிறுவனத்துக்கு 'சீல்' வைத்தபோது அங்கிருந்த பாதிக்கப்பட்டவர்கள் அழுது புலம்பினர். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சுகுணா ஆறுதல் கூறி அனுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com