

சென்னை,
பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டு வரும் நிலையில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் முதலில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் சில தகவல்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது. அதில், பள்ளி விடுதியில் பணிபுரியும் பணியாளர்கள் உணவுகளை சமைக்கும்போதும், பரிமாறும்போதும் முக கவசம் அணிவதோடு, கைகளை சானிடைசர் கொண்டு முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
இதுதவிர, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், விடுதி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவது 100 சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும்' என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தற்போது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது சுகாதாரத்துறையின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் எப்படி சாத்தியமாகும்? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போட தொடங்கவில்லை. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் சுகாதாரத்துறை சார்ந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.
பள்ளிகள் திறப்பு குறித்து எதிர்காலத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளாகவும் இதை பார்க்கலாம். தற்போது பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி என்பது கட்டாயம் இல்லை. ஆனால் தகுதியான மாணவர்கள் (18 வயதை பூர்த்தி செய்தவர்கள்) தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்' என்றனர்.