இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சு தீர்ப்பை மறைமுகமாக தனி நீதிபதி ரத்து செய்ய முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு

குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வது குறித்து டிவிசன் பெஞ்சு தீர்ப்பை மறைமுகமாக ரத்து செய்யும் விதமாக தனி நீதிபதி உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சு தீர்ப்பை மறைமுகமாக தனி நீதிபதி ரத்து செய்ய முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்த இந்திய தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதையடுத்து இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு மனைவி இந்தியா வந்துவிட்டார். மகன்கள் இருவரும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.

அதையடுத்து இரு மகன்களையும் கேட்டு, தந்தை சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சு விசாரித்தது. அப்போது, மனுதாரர் மகன்களை அழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். பின்னர், மகன்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று தாயாருக்கு உத்தரவிட்டனர்.

ஆனால் அமெரிக்காவுக்கு செல்லாமல், கணவனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று குடும்பநல கோர்ட்டில் ஒரு வழக்கும், கணவனுக்கு எதிராக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் எழும்பூர் கோர்ட்டில் ஒரு வழக்கும் மனைவி தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கணவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையின்போது இந்த தம்பதியின் இரு மகன்களையும் அழைத்து விசாரித்தார்.

அப்போது, அவர்கள் தாயுடன் இந்தியாவில் இருக்க விரும்புவதாக கூறினர். எனவே அவர்கள் இருவரும் தாயின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்று உத்தரவிட்டார். அதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவிட்டும் தன் மகன்களை அமெரிக்கா அழைத்து வரவில்லை என்று மனைவிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை கணவர் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வழக்குகளை ரத்து செய்யக் கோரி கணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த டிவிசன் பெஞ்சு உத்தரவை செயலிழக்கச் செய்யும் விதமாக உத்தரவை பிறப்பித்துள்ளார். இத்தனைக்கும் அவர் விசாரித்த வழக்கில், குழந்தைகளை கேட்டு எந்த நிவாரணமும் கோர வில்லை. அவர் விசாரித்த வழக்குக்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமே இல்லை.

ஐகோர்ட்டு விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுவை 2 நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சுதான் விசாரிக்க வேண்டும். இந்த டிவிசன் பெஞ்சு தீர்ப்பை எதிர்க்கும் வழக்கை தனி நீதிபதி விசாரிக்கவில்லை. குழந்தைகளை கேட்டும் அவரிடம் வழக்கு தொடரப்படவில்லை. அப்படி இருக்கும்போது, மறைமுகமாக இந்த டிவிசன் பெஞ்சு உத்தரவை ரத்து செய்யும்விதமாக அவர் உத்தரவிட முடியாது. அதாவது, இந்த டிவிசன் பெஞ்சு உத்தரவை தாக்கும்விதமாக இணையான மற்றொரு உத்தரவை அவர் பிறப்பிக்க முடியாது.

1939-ம் ஆண்டே இந்த ஐகோர்ட்டு முழு அமர்வு, ஆட்கொணர்வு மனுவை தனி நீதிபதி விசாரிக்க முடியாது என்று முடிவு எடுத்து உத்தரவிட்டுள்ளது. எனவே, குழந்தைகள் குறித்து இந்த டிவிசன் பெஞ்சு முடிவுக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டத்தின் பார்வையில் ஏற்றுக்கொள்ளும்விதமாக இல்லை.

தனி நீதிபதி, கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். டிவிசன் பெஞ்சு உத்தரவுக்கு மேல் அவர் முடிவு எடுக்கக்கூடாது. அவரது உத்தரவே சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், குழந்தைகள் தொடர்பான தனி நீதிபதி உத்தரவு தவிர்க்கவேண்டியது ஆகும்.

மனுதாரரின் 2 மகன்களின் பாஸ்போர்ட் வருகிற 6-ந் தேதியுடன் காலாவதி ஆகுகிறது. அமெரிக்க கோர்ட்டும் கடந்த ஆண்டே பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளது. 6-ந் தேதிக்குப் பின்னர் அவர்கள் இந்தியாவில் இருந்தால், சட்டரீதியாக சிக்கல் ஏற்படும்.

எனவே, இரு மகன்களையும் மனுதாரர் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும். மகன்களுடன் மனைவியும் வந்தால், அவருக்கு அனைத்து வசதிகளையும் கணவரான மனுதாரர் செய்து கொடுக்க வேண்டும். விசாரணையை 31-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com