

சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
தீர்ப்பு அச்சம்
கேள்வி:- ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து இருக்கிறார்களே?
பதில்:- உச்ச நீதிமன்றத்தினால் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு, 4 ஆண்டுகால சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட முதல் குற்றவாளியான ஜெயலலிதா இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு பெங்களூர் சிறையில் இருந்திருப்பார். ஏற்கனவே, அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு விழாக்களில் அவரது புகைப்படங்களை வைக்கக்கூடாது என்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
அந்த வழக்கில், தங்களுடைய நோக்கத்துக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் அவசர அவசரமாக ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்திருக்கின்றனர்.
அவை மரபு மீறல்
சபாநாயகர் என்பவர் சட்டமன்றத்தின் அவையின் மரபை பாதுகாக்க வேண்டியவர். தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகளின் ஒத்துழைப்போடு, மாமூல் வாங்கிக் கொண்டு, அரசின் ஒத்துழைப்போடு விற்கப்படுகிறது என்ற செய்தியை சட்டமன்றத்தில் நாங்கள் எடுத்துச் சொன்னபோது, ஆதாரமாக குட்காவை சட்டமன்றத்தில் எடுத்துக் காட்டியபோது, அதில் எந்த தவறும் இல்லாதபோதும், எங்களை அவையில் இருந்து வெளியேற்றினார்.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அப்போது நாங்கள் அவையை மீறியதாக சொல்லும் அவர், இன்றைக்கு அவை மரபை மீறியுள்ளார் என்பது தான் எங்களுடைய குற்றச்சாட்டு.
அமைச்சர் ஜெயகுமாருக்கு கேள்வி?
கேள்வி:- படத்திறப்பு விவகாரத்தை தி.மு.க. அரசியலாக்குவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?
பதில்:- தி.மு.க. மட்டுமல்ல, காங்கிரஸ், சி.பி.எம்., தே.மு.தி.க. உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்த்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, ஜனாதிபதி மற்றும் தமிழக கவர்னர் ஆகியோரை அணுகியும், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் படம் திறப்பது தவறு, எனவே வரமாட்டோம் என்று அத்துணை பேருமே சொன்ன பிறகுதான் அவசர அவசரமாக சபாநாயகர் மூலம் திறந்து இருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில், மீன் வளத்துறை அமைச்சராக உள்ள ஜெயகுமார், சட்டமன்றத்தில் மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் படத்தை திறப்போம் என்று சொல்லி இருக்கிறார். அப்படியெனில், பிரதமரும், ஜனாதிபதியும் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.