ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையம், எம்.எல்.ஏ. அலுவலகத்தை இடிக்க திட்டம்

ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையம், எம்.எல்.ஏ. அலுவலகத்தை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையம், எம்.எல்.ஏ. அலுவலகத்தை இடிக்க திட்டம்
Published on

ரூ.120 கோடியில்...

திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச்சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. அதிகரித்து வரும் வாகன பெருக்கத்துக்கேற்ப இந்த வழித்தடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மற்றொரு பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே ரூ.120 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அண்மையில் திருச்சி வந்து, புதிய காவிரி பாலம் அமைய உள்ள பகுதிகளை பார்வையிட்டார்.

அரசு கட்டிடங்கள்

அதைத்தொடர்ந்து புதிய காவிரி பாலத்துக்கான திட்ட அறிக்கைக்கான ஆய்வுப்பணிகள் தொடங்கின. அதில், தற்போதுள்ள காவிரி பாலத்தின் மேற்கு பகுதியில் 5 அடி தொலைவில் 14 தூண்களுடன் 18 மீட்டர் அகலம், 544 மீட்டர் நீளத்தில் 4 வழிப்பாதையாக புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும், புதிய பாலத்தில் மேல்புறத்தில் மட்டும் 1 மீட்டரில் நடைபாதை அமைக்கப்படும்.

இதற்காக, சிந்தாமணி, மாம்பழச்சாலை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வருவாய்த்துறையினரும், மாநில நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து ஆய்வு செய்தனர். இதில் மாம்பழச்சாலை சிக்னலை ஒட்டியுள்ள ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. அலுவலகம், அதன் அருகிலுள்ள ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி) அலுவலகத்தின் ஒரு பகுதி என்று அரசு கட்டிடங்கள் பாலம் அமைக்க உள்ள இடத்தில் உள்ளன.

இடித்து அகற்றப்படும்

மேலும், சிந்தாமணி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கோவில் மற்றும் தனியார் நிலங்களையும் கையகப்படுத்த வேண்டும். இந்த இடங்களை கையகப்படுத்தும் முதற்கட்ட பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த இடங்கள் கையகப்படுத்தப்பட்டால், அந்த இடத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம், மகளிர் போலீஸ் நிலைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, "புதிய பாலத்துக்காக கையகப்படுத்த வேண்டிய நிலங்களில் பெரும்பாலானவை அரசு நிலங்கள் என்பதால், எவ்வித பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. கையகப்படுத்தும் நிலங்களுக்கான இழப்பீடு மற்றும் இடிக்கப்படும் அரசு அலுவலகங்களுக்கு மாற்று ஏற்பாட்டுக்கான மதிப்பீட்டு தொகையாக ரூ.10 கோடி வரை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை கையகப்படுத்தி, அவற்றில் உள்ள கட்டிடங்களை இடிப்பதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம். அதன்பிறகு பணிகள் தொடங்கப்படும்" என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com