

சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கண்காணித்து உரிய ஆலோசனைகளை வழங்க மருத்துவர் பாலாஜி உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
இதனையடுத்து கடந்த மாதம் 7ந் தேதி அரசு மருத்துவர் பாலாஜி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் இதுவரை 25க்கும் மேற்பட்டவர்களிடம் நேரடி விசாரணை நடத்தியபோதும் மருத்துவர் பாலாஜி தான் பல முக்கிய தகவல்களை வாக்குமூலமாக கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பது குறித்த விவரத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மருத்துவர் பாலாஜி இன்று (வியாழக்கிழமை) ஆணையத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்கிறார்.