தி.மு.க. அறிக்கை ஒருதலைப்பட்சமானது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அறிக்கை

தி.மு.க. அறிக்கை ஒருதலைப்பட்சமானது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்து உள்ளார். #CMEdappadiPalanisamy
தி.மு.க. அறிக்கை ஒருதலைப்பட்சமானது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அறிக்கை
Published on

சென்னை,

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் 612017 அன்று (நேற்று) முற்பகல் 11 மணிக்கு தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையைப் போக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறும் முதல்அமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதல்அமைச்சர், தொழிலாளர் பிரச்சினையையும், பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது தொடர்பான விபரம் எதையும் வெளியிடவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டது.

ஒருதலைப்பட்சமானது

இப்போது தி.மு.க. அறிக்கை ஒருதலைப்பட்சமானது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறுகேட்டுக் கொண்டார். அப்போது, அவரிடம் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தெரிவித்து, போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதியம் குறித்த கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்ட நிலையில் சில தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தொடர்வது தவறானது என்றும் தெரிவித்தேன்.

ஊதியம் குறித்த பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் 23 முறை இதுவரை நடைபெற்றுள்ளது. தொழிலாளர்கள் 2.57 காரணி ஊதிய உயர்வு கோரி கோரிக்கை வைத்தனர். 2013 ல் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிய ஊதிய உயர்வான 5.5 சதவீதத்தை, 2.44 காரணியுடன் சேர்த்து பார்த்தால் தொழி லாளர்கள் கேட்டுள்ள 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு நிகராக அமைந்துள்ளது என்ற விபரமும் தெரிவிக்கப்பட்டது.

ஊதிய உயர்வின்படி போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிக பட்ச ஊதிய உயர்வு ரூ.11,361 குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.2,684 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வைவிட, தற்போது வழங்கப்படவுள்ள ஊதிய உயர்வு அதிகமான தாகும் என்ற விபரமும் தெரிவித்து, எதிர்கட்சித் தலைவரின் தொழிற்சங்கங்களை சார்ந்தவரிடம் நான் எடுத்துரைத்த விவரங்களை தெரிவித்து, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், உடனே வேலை நிறுத்தத்தைகை விட்டு, பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்துங்கள் என்று கூறினேன்.

ஆனால், தி.மு.க. தனது அறிக்கையில், முதல்-அமைச்சரிடம் தொலை பேசியில் எதிர்கட்சித் தலைவர் தொழிலாளர் பிரச்சினையையும் பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க கேட்டுக் கொண்டதாகவும், தமிழ்நாடு அரசு, என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தொடர்பான விவரம் எதையும் தெரிவிக்கவில்லை என இன்று காலையில் வெளிவந்த செய்தித்தாள்களின் வாயிலாக அறிந்தேன். நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நான் கூறியதை தெரிவிக்காமல், ஒருதலைப்பட்சமாக தி.மு.க. அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

இத்தருணத்தில் பொதுமக்களின் நலன் கருதி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனே பணிக்குத் திரும்ப மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com