நெசவாளர்களின் மேம்பாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மு.க.ஸ்டாலினிடம் ஆந்திர மாநில எம்.எல்.ஏ. கோரிக்கை

ஆந்திராவில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழக நெசவாளர்களின் மேம்பாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ரோஜா நேரில் கோரிக்கை விடுத்தார்.
நெசவாளர்களின் மேம்பாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மு.க.ஸ்டாலினிடம் ஆந்திர மாநில எம்.எல்.ஏ. கோரிக்கை
Published on

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆந்திர பிரதேசத்தின் நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா மற்றும் அவரது கணவரும் திரைப்பட இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரோஜா அளித்த பேட்டி வருமாறு:-

எனது தொகுதி நகரி, தமிழக எல்லைப்பகுதியில் இருப்பதால் அதுசம்பந்தப்பட்ட விஷயங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக வந்துள்ளோம். அவரது சந்திப்புக்கான நேரம் உடனடியாக கிடைத்தது. மிகுந்த நட்பின் அடிப்படையில் எங்களை அவர் வரவேற்று பேசினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இப்போதுதான் முதன்முறையாக சந்தித்தேன். ஆனால் பல நாட்கள் பழகியதுபோல மிகுந்த நட்புடன் சாதகமாக பேசினார்.

நான் கொடுத்த சில பிரச்சினைகள் பற்றிய மனுவை படித்து பார்த்துவிட்டு, அதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

சாலை அமைக்கும் பணி

திருத்தணி தாலுகாவில் விஜயபுரம் என்ற ஊர் தமிழக எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. தொழில்பேட்டைக்காக 5,600 ஏக்கர் நிலத்தை ஆந்திரபிரதேச தொழில் உள்கட்டமைப்பு கழகம் ஆர்ஜிதம் செய்துள்ளது. அதன் தலைவராக 2 ஆண்டுகள் இருந்தேன். தொழில்பேட்டை இணைப்பு சாலைக்காக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்துவிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெசவாளர் மேம்பாடு

எனது கணவர் ஆர்.கே.செல்வமணி தென்னிந்திய நெசவாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். முதல்-அமைச்சரிடமும் இங்குள்ள நெசவாளர்களுக்கு மேம்பாட்டிற்காக என்னென்ன செய்ய முடியும் என்பது பற்றி பேசியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி உடனிருந்தார். பட்டுத் துணியில் நெய்யப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை, அவரிடம் இந்த சந்திப்பின்போது 2 பேரும் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com