

சேலம்,
தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த சமயத்தில், வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்கிக்கொள்ள ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர் மறைந்த பின்னர் அம்மா இருசக்கர வாகன திட்டம் எனும் பெயரில் தமிழக அரசால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்படி, தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் சுயமாக தொழில் செய்யும் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்படும்.
இந்த நிலையில், சேலத்தில் அரசு சார்பில் மானிய விலையில் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1,004 பெண்களுக்கு முதற்கட்ட அடிப்படையில் மானிய விலையிலான ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
முதல் அமைச்சர் பழனிசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகளிருக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். அவர் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, ஆண்டுக்கு ஒரு லட்சம் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறினார்.
பெண்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எந்த துறையிலும் தொய்வு என்பது இல்லை என்றும் கூறினார்.
மேலும் இந்த விழாவில் சேலம் மாவட்டத்தில் அரசு துறைகளின் மூலம் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 2,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.