

குத்தாலம் அருகே உள்ள பழையகூடலூர் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகப்பா, ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாஷ் உள்ளிட்ட உர தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேலன், கூட்டுறவு சங்க செயலாளர் விஜயலட்சுமி, ஊராட்சி தலைவர்கள் ஞானசேகரன் (மேக்கிரிமங்கலம்), புவனேஸ்வரி ராஜசேகரன் (சென்னியநல்லூர்), கவிதா சிவக்குமார் (கொக்கூர்), மாலா நாகேஸ்வரன் (பேராவூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.