ஓய்வுபெற்ற அதிகாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி; மகன், மகள் கவனிக்காததால் விரக்தி

மகன், மகள் கவனிக்காததால், சீர்காழியில் ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓய்வுபெற்ற அதிகாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி; மகன், மகள் கவனிக்காததால் விரக்தி
Published on

சீர்காழி,

மகன், மகள் கவனிக்காததால், சீர்காழியில் ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம், சீர்காழி தென்பாதி அம்மன் நகரை சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 73). ஓய்வு பெற்ற வருமான வரித் துறை அதிகாரி. இவர், தனது மனைவி சுகுணாலதா (61), தங்கை இந்திராபாய் (68) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் சக்கரபாணியின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சக்கரபாணி வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது 3 பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கு மயங்கிய நிலையில் கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது அவர்கள் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவல் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சக்கரபாணிக்கு, சுதன் நாராயணன் என்ற மகனும், மதுபாலா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமானவர்கள். இதில் சுதன்நாராயணன் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இதேபோல் மகள் மதுபாலா டெல்லியில் வசித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தாய், தந்தைக்கு எந்த உதவிகளையும் செய்யாமல், பேரன், பேத்திகளை அவர்களிடம் காட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக்கரபாணி, அவருடைய மனைவி சுகுணாலதா, தங்கை இந்திராபாய் ஆகியோர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சக்கரபாணி வீட்டுக்கு தண்ணீர் கேன் கொண்டு வரும் சீர்காழி தென்பாதியை சேர்ந்த விமல் (23) என்பவர், இவர்களுக்கு உறுதுணையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக்கரபாணி குடும்பத்தினர் விமலை வளர்ப்பு மகன் போல் கருதி வந்தனர்.

மேலும், சக்கரபாணி மனைவி விஷம் குடிப்பதற்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். அதில், விமல் உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எங்களிடம் பணம் இல்லை. யாரிடமும் பணம் கேட்கவும் மனம் இடம் தரவில்லை. இதனால் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களை மன்னித்துவிடு என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவத்தால் சீர்காழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com