‘ஜெய்பீம்’ பட விவகாரம் சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு

‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘ஜெய்பீம்’ பட விவகாரம் சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு
Published on

ஆலந்தூர்,

சென்னை சைதாப்பேட்டை பெருநகர 18-வது கோர்ட்டில் வேளச்சேரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடிகர் சூர்யா நடித்து உள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுபடுத்தியும், பிற மக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும், அக்னி குண்டத்தையும், மகாலட்சுமியையும், குருவின் பெயரை இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

சூர்யா, ஜோதிகா மீது வழக்கு

வெளிநாட்டு மத மாற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தை நன்கொடை என்ற பெயரில் பெற்றும், படத்துக்கு விளம்பர செலவாக ரூ.1 கோடியை காட்டி மதமாற்ற நிறுவனங்களுக்கு கொடுத்து அன்னிய செலாவணி குற்றம் செய்தும், அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

எனவே படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், கலை இயக்குனர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி வேளச்சேரி போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை 18-வது நீதிமன்ற நீதிபதி, 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வருகிற 20-ந்தேதி தாக்கல் செய்யும்படி வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com