திருமணம் செய்வதாக மோசடி செய்த இளம்பெண் சுருதியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி

திருமணம் செய்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண் சுருதியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
திருமணம் செய்வதாக மோசடி செய்த இளம்பெண் சுருதியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
Published on

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுருதி (வயது 21). இவர் ஒரு சினிமா படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இவர் திருமண ஆசைகாட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மடக்கி பலகோடி ரூபாய் மோசடி செய்தார். இதில் பாதிக்கப்பட்ட என்ஜினீயர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சுருதியை கைது செய்தனர்.

சுருதியிடம் இருந்து 15 விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள், ரூ.4 லட்சம் மதிப்பிலான மேக்-அப் செட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை அவர் மீது 11 பேர் புகார் செய்து உள்ளனர். சுருதியின் முகநூலில் (பேஸ்புக்) அவருடைய கவர்ச்சி படங்கள் அதிகமாக இருந்ததால், அதை பார்த்து மேலும் பல இளைஞர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அந்த முகநூலை போலீசார் முடக்கினார்கள்.

கோர்ட்டில் ஆஜர்

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கோவையை சேர்ந்த 2 தொழில் அதிபர்களுக்கும், சுருதியுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே அந்த தொழில் அதிபர்கள் யார்?,

சுருதிக்கு சினிமாவில் உள்ள துணை நடிகர்களிடம் தொடர்பு இருப்பதால், மோசடி செய்த பணத்தை அவர் சினிமாவில் முதலீடு செய்தாரா?, எந்த சினிமா தயாரிப்பாளரிடம் பணத்தை கொடுத்தார் என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

எனவே இளம்பெண் சுருதியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுருதி பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

7 நாள் அனுமதி

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வேலுசாமி, சுருதியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து, போலீசார் சுருதியை அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, சுருதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்து உள்ளதால், அவர் எத்தனை பேரிடம், எவ்வளவு தொகை மோசடி செய்தார்? அந்த பணம் எங்கே? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்துவிடும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com