தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 5-ந் தேதிவரை நடக்கும் - சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 5-ந் தேதி வரை நடக்கும் என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 5-ந் தேதிவரை நடக்கும் - சபாநாயகர் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் பங்கேற்றனர். தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.

சட்டசபையை எத்தனை நாட்கள் கூட்ட வேண்டும்? அப்போது என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் சபாநாயகர் ப.தனபால் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபை 5-ந் தேதி வரை நடைபெறும். தினமும் காலை 10 மணிக்கு சட்டசபை கூடும். 3-ந் தேதி (இன்று) சட்டசபை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து, அமைச்சர் இரா.துரைக்கண்ணு, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், புற்றுநோய் நிபுணர் டாக்டர் வி.சாந்தா ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும். அதன் பின்னர் அவை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படும்.

4-ந் தேதி சட்டசபை கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது விவாதம் தொடங்கும். இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று பேசுவார்கள்.

5-ந் தேதியன்றும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிந்ததும் அதற்கான பதிலுரை நிகழ்த்தப்படும். மேலும் அன்று சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

அரசினர் தீர்மானம் எதுவும் இருந்தால் அதுவும் எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேள்விக்கு சபாநாயகர் ப.தனபால் அளித்த பதில் வருமாறு:-

சட்டசபையில் படத்திறப்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தால் அதுபற்றி முன்கூட்டி அறிவிக்கப்படும். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி பற்றி அரசிடம் இருந்து தகவல் வரவில்லை. அது தெரிய வந்ததும் அறிவிக்கப்படும்.

இந்த கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது அவர்களின் முடிவு. அதில் நாங்கள் தலையிட முடியாது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும்படி எதிர்க்கட்சிக்கு நான் அழைப்பு விடுத்தேன். எதிர்பார்த்து காத்திருந்துவிட்டு பின்னர் அழைத்தேன்.

அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், கவர்னர் உரை மீதான விவாதத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை என்று கூறினார். பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர்கள் பங்கேற்பார்களா? என்பது பற்றி தெரியவில்லை. பங்கேற்பார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com