ஆவின் பாலகங்களில் ஜிஎஸ்டி வரிக்குறைப்பை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

கோப்புப்படம்
ஆவின் பாலகங்களில் பால் சார்ந்த பொருட்கள் விலைகுறைப்பின்றி விற்பனை செய்யப்படுவது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிக்குறைப்பை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நெய், வெண்ணெய், பன்னீர் போன்ற பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்கப்படும் பால் பொருட்கள் முந்தைய வரிவிதிப்பின் அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் மூலம் நெய் கிலோ ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் வரையிலும், வெண்ணெய் சுமார் 40 ரூபாய் வரையிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவின் பாலகங்களில் பால் சார்ந்த பொருட்கள் விலைகுறைப்பின்றி விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தில் காலதாமதமாக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, ஜிஎஸ்டி வரிக்குறைப்பை தமிழகத்தில் அமல்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பொதுமக்களுக்கு எந்தவித கால தாமதமுமின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






