முன்பதிவுக்கான தொழில்நுட்ப பணி: தென் மாவட்ட ரெயில்களில் ஆன்லைன் முன்பதிவில் சிரமம்

முன்பதிவுக்கான தொழில்நுட்ப பணி நடப்பதால் தென் மாவட்ட ரெயில்களில் ஆன்லைன் முன்பதிவில் சிரமம் ஏற்பட்டது.
முன்பதிவுக்கான தொழில்நுட்ப பணி: தென் மாவட்ட ரெயில்களில் ஆன்லைன் முன்பதிவில் சிரமம்
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சிறப்பு மற்றும் பண்டிகை கால சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, அந்த ரெயில்களை வழக்கமான எக்ஸ்பிரஸ் ரெயில்களாக, வழக்கமான கட்டணத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான தொழில்நுட்ப பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வருகிற 21-ந் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, தினமும் நள்ளிரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை இந்த பணிகள் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட 28 ரெயில்களுக்கான பணி நேற்று காலை 5.30 மணி வரை நடந்தது. இந்த பட்டியலில் இருந்த கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை உள்ளிட்ட ரெயில்களுக்கு இருமார்க்கங்களிலும் நேற்று மாலை 4 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு மேற்கொள்ள முடியவில்லை. அந்த ரெயில்களின் விவரங்களே ஆன்லைனில் காட்டவில்லை.

ஏற்கனவே சென்னையில் மழை, வெள்ளம் காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்த தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றனர். இதனால், தென்மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் காத்திருப்போர் பட்டியலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். தட்கல் காத்திருப்போர் பட்டியலில் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால், இந்த ரெயில்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர்.

ஆனால், ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தென்மாவட்ட ரெயில்களுக்கு வழக்கம் போல டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com