'நாட்டின் இறையாண்மையை காத்து உள்ளது, கருணாநிதியின் பேனா' - ஆ.ராசா பேச்சு

‘தமிழக வளர்ச்சி மட்டுமின்றி நாட்டின் இறையாண்மையையும் கருணாநிதியின் பேனா காத்து உள்ளது’ என்று ஆ.ராசா கூறினார்.
'நாட்டின் இறையாண்மையை காத்து உள்ளது, கருணாநிதியின் பேனா' - ஆ.ராசா பேச்சு
Published on

தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினரும், மேயருமான ஜெகன் பெரியசாமி, மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கலைஞரின் நூற்றாண்டு விழாவை பற்றி பேசுவதற்கு முன் அவருடைய தத்துவம், தலைமை, நிர்வாகம் என பலவற்றையும் பற்றி பேச வேண்டும். கட்சி தலைவராக 50 ஆண்டு, எம்.எல்.ஏ.வாக 60 ஆண்டு, 5 முறை தமிழக முதல்-அமைச்சர் என்று அவருடைய வரலாறு தொடர்ந்தது. தமிழகத்தில் கலைஞரை வைத்து நான் பயனடையவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. இந்தியாவின் அரசியலுக்கு ஆபத்து வந்த போது எல்லாம், அதனை தடுப்பதற்கு துணை நின்றவர் கலைஞர்.

மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்கள் என்ற பெயரில் தேவையில்லாததை கொண்டு வருகிறார்கள். இந்தியாவின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பில் உத்தரபிரதேசத்தில் 35 சதவீதம், குஜராத்தில் 24 சதவீதம், தமிழ்நாட்டில் 11 சதவீதம், கேரளாவில் 10 சதவீதம் என்று தெரியவந்து உள்ளது. இதில் திராவிட மாடல் தான் வென்றுள்ளது. குஜராத் மாடல் அல்ல. காஷ்மீரில் 370 பிரிவை எடுத்துவிட்டீர்கள். பல வளர்ச்சி வரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஒன்றும் வரவில்லை.

கலைஞர் கருணாநிதியின் பேனா கவுண்டர் சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கையெழுத்திட்டது. 1929-ல் பெரியார் கொண்டு வந்த பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வேண்டும் என்ற கோரிக்கையை, 1989-ல் கலைஞர் நிறைவேற்றி காட்டினார். அதில் இருந்து 30 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படி பல்வேறு வகையில் கலைஞரின் பேனா தமிழக வளர்ச்சிக்கு மட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்பு இறையாண்மையையும் காத்து உள்ளது. அதனை எதிர்க்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களை பேச அனுமதிக்கவில்லை. தி.மு.க.வை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது. தமிழக கவர்னர் மணிப்பூரைப்பற்றி பேசாமல் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதைப் பற்றி பேசி வருகிறார். மோடியின் செயல்பாடுகளுக்கு முதல்-அமைச்சரின் எதிர்ப்புகள் தொடரும். நாட்டின் நலன் முக்கியம் என்று கலைஞரின் வழியில் முதல்-அமைச்சர் பயணிக்கிறார். அவர் வழியில் நாம் அனைவரும் பயணிப்போம். கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com