

வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை சென்னையில் வாக்களித்து விட்டு விருத்தாசலம் வந்தார். அதன்பிறகு அவர், விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட இடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டார்.வயலூர் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாற்றம், முன்னேற்றம்
சென்னை விருகம்பாக்கத்தில் காலை 7 மணிக்கு எனது வாக்கை பதிவு செய்து விட்டு 11 மணிக்கு விருத்தாசலம் வந்தேன். பிறகு ஒவ்வொரு வாக்குச்சாவடியாக பார்வையிட்டு அங்குள்ள அலுவலர்களிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் நன்றாக வேலை செய்கிறதா? வாக்குப்பதிவு எவ்வளவு நடந்துள்ளது, ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என கேட்டறிந்தேன். மக்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து செல்கின்றனர்.விருத்தாசலத்திற்கு மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். எழுச்சியை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் என்னால் பார்க்க முடிந்தது. பெண்களுடைய ஆதரவு மிகப்பெரிய அளவில் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நிச்சயமாக தே.மு.தி.க. விருத்தாசலம் தொகுதியில் அமோகமாக வெற்றி பெறும்.கொரோனா காலத்தில் ஒரு வருடமாக யாருக்குமே வேலை இல்லை. அதனால் ஏழ்மையை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று ஆட்சியில் அமர நினைக்கின்றனர். எனவே ஓட்டுக்கும், இலவசத்திற்கும் அடிபணியாமல் தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் முன்னேற்றம் வரவேண்டும் என மக்கள் ஒரு தெளிவான முடிவை இந்த தேர்தலில்
எடுப்பார்கள்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
வாக்குவாதம்
முன்னதாக மங்கலம்பேட்டை வாக்குச்சாவடி மையத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார், அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தியதோடு, வாக்குச்சாவடி மையத்துக்குள் வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர்.இதனால் தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு பிரேமலதா விஜயகாந்த் காரில் இருந்து இறங்கி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். இதேபோல ரூபநாராயணநல்லூர் மற்றும் செம்பளாக்குறிச்சி கிராமங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் சென்றார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் அதிகளவு செல்வதாக கூறி அங்கிருந்த மாற்று கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும், தே.மு.தி.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அந்தந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.