‘நீட்' விவகாரம்: கவர்னருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்

‘நீட்' தேர்வு விவகாரத்தில் கவர்னரின் செயல்பாட்டுக்கு எதிராக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரித்து வாழ்த்து தெரிவித்தனர்.
‘நீட்' விவகாரம்: கவர்னருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்
Published on

சென்னை,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, அதுதொடர்பான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த சட்டமுன்வடிவை கவர்னர் உடனே ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவேண்டும், அதற்கு ஜனாதிபதி காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் வழங்க, பிரதமர் தலைமையிலான மத்திய அரசு உரிய பரிந்துரையை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், சட்ட முன்வடிவை அனுப்பாமல் இருக்கும் கவர்னரை எதிர்த்தும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கட்சி நிர்வாகிகள் ஆதரித்து வாழ்த்து

இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் நேற்று நேரில் வந்து ஆதரித்து, வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல்வேறு மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்களும் கலந்து கொண்டனர்.

அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,தி.மு.க. செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலன், ம.தி.மு.க. மாணவர் அணி வி.ஏ.முகமது ரிலுவான் கான் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகளும், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் உள்பட பலரும் பங்கு பெற்று பேசினர்.

அனைத்து தலைவர்களும் நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் சட்ட முன்வடிவை கவர்னர் உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து சட்ட முன்வடிவு மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், அடுத்தகட்டமாக இந்த உண்ணாவிரத போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரம் அடையும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com