நெய்வேலி மந்தார குப்பத்தில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்திற்கு ஜம்புலிங்க முதலியார் பெயர் சூட்ட வேண்டும்

நெய்வேலி மந்தார குப்பத்தில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்திற்கு ஜம்புலிங்க முதலியார் பெயர் சூட்ட வேண்டும் வைகோ வேண்டுகோள்.
நெய்வேலி மந்தார குப்பத்தில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்திற்கு ஜம்புலிங்க முதலியார் பெயர் சூட்ட வேண்டும்
Published on

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள திருக்கண்டலேஸ்வரம் எனும் ஊரில் பிறந்தவர் ஜம்புலிங்க முதலியார். வேளாண்மை தொழிலிலும், ஜவுளி வர்த்தகத்திலும் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தார்.

இவர், நெய்வேலியில் இருந்த தனது விவசாய நிலத்தில் தண்ணீருக்காக புதிய கிணறு தோண்டும்போது, கறுப்புநிற திரவப் பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அப்போதைய ஆங்கிலேய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். பின்னர் அவரே தனது சொந்த செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு பூமிக்கடியில் நிலக்கரி படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.

நாடு விடுதலை பெற்ற பின்னர், பெருந்தலைவர் காமராஜர் வழிகாட்டுதலுடன் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் சந்தித்து, நிலக்கரி கனிமவளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்.

பின்னர் தனக்குச் சொந்தமான 620 ஏக்கர் நிலத்தை முதல்-அமைச்சர் காமராஜரிடம் தமிழ்நாடு அரசுக்கு கொடையாக வழங்கினார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.2,500 கோடிக்கு மேலாகும்.

பின்தங்கிய கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதற்கும், நாட்டின் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும் என்.எல்.சி. நிறுவனம் உருவாக அடித்தளமிட்டவர் ஜம்புலிங்க முதலியார்.

அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், நெய்வேலி மந்தாரகுப்பத்தில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்திற்கு ஜம்புலிங்க முதலியார் பெயரைச் சூட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com