"உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.
"உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்
Published on

தாராபுரம்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

பிரதமர் மோடியின் வருகை தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். இந்தியாவை இருளுக்குள் தள்ளிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ், திமுக கூட்டணி தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

காங்கிரஸும் திமுகவும் சேர்ந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆண்டன. ஆனால், அவ்விரு கட்சிகளும் இந்தியாவுக்கு எவ்வித பிரம்மாண்டமான திட்டங்களையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. தமிழகத்துக்கும் எந்த திட்டத்தையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை.

காங்கிரஸ் - திமுக ஆட்சியில் இருந்த போதுதான் காளை, விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன்காரணமாகத்தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சாரும். உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com