

சென்னை,
நாம் அனைவரும் 3-ம் ஆண்டின் தொடக்க விழாவில் நிற்கின்றோம். 2 ஆண்டுகளுக்கு முன் கட்சி ஆரம்பித்த பொழுதில் இருந்த அதே எழுச்சியோடும், வேகத்தோடும் நாம் இன்றும் களம் காண்கிறோம். இதற்கு முதல் காரணம், நாம் களம் கண்ட முதல் தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் அளித்து நம்மீது அவநம்பிக்கை கொண்டோரையும் ஆச்சரியத்தில் இமை உயர்த்த வைத்த நம் மக்களே. நம் மனதிற்கு உரமேற்றிய அவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமிது.
அரசியலை வெகுதூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு நான் கட்சி ஆரம்பித்தவுடன் கொஞ்சமும் தயங்காமல் என்னோடு கைகோர்த்து கட்சி வளர்க்கும் நம் நிர்வாகிகளும், செயல் வீரர்களும் அனைவரும் கரம் குலுக்கி பாராட்ட வேண்டியவர்களே. என் கனிவோடு என் கண்டிப்பையும் பொறுத்து கடந்த 38 ஆண்டுகளாக என் நிழலிலும், எனக்கு நிழலாகவும் இருக்கும், என் காலம் கடந்த பின்னும் எனக்கு அடையாளமாக இருக்கப்போகும் நற்பணி இயக்கத்தை கட்டிக்காத்துவரும் என் தோழர்களை நன்றியுடன் நினைக்கிறேன்.
இதுவரை என்ன செய்தோம் என்று கேட்போர் பாராட்ட நாம் சில செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. அதற்கான பரீட்சை வெகு அருகில். ஓய்வு மட்டுமல்லாமல் யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை, அடுத்து வரும் நாட்களெல்லாம் செயல், செயல் மட்டுமே... இன்று தொடங்குவோம் அதற்கான பணிகளை, 2021-ல் வென்று தொடங்குவோம் மக்கள் பணிகளை. வாழ்த்துக்களோடும், நன்றிகளோடும், நம்பிக்கையோடும் நாளை நமதே. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.