வடமாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்-சீமான்

வடமாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
வடமாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்-சீமான்
Published on

திருப்பத்தூர்

வடமாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.

7-வது நாளாக போராட்டம்

திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் குறவன் (எஸ்.சி.) சாதி சான்றிதழ் கேட்டு மாணவ- மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று 7-வது, நாளாக ஆண்கள், பெண்கள் கூடைகள் பின்னி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு நாம தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து சாதி சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சி படை உருவாக்கம்

பட்டியல் சான்றிதழ் கேட்டு பசியும் பட்டினியுமாக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை கண்டு மனம் வருந்துகிறது. ஆதி தமிழ் குடி குறவன் குடி தான். வெள்ளைக்காரன் காலத்தில் குறவன் இன மக்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் போராடக்கூடியவர்கள் என்பதால் அவர்களை அடக்கி வைக்க குற்றப்பரம்பரை என பிரித்து வைத்தனர்

இன்று வரை அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்காமல் மறுக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள், நரிக்குறவர்கள் வீட்டுக்கு சென்று சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சாப்பிடுவதை சாப்பிடுகிறார்களா?. இந்த மக்களுக்காக போராட புரட்சி படை உருவாகியுள்ளது. 7 நாட்களாக பசியும் பட்டினியுமாக இங்கு போராடிவரும் குழந்தைகளை அதிகாரிகள் திரும்பி பார்க்கவில்லை.

நினைத்தது நடக்கும் வரை...

ஈரோடு கிழக்கில் ரூ.500 கோடி செலவு செய்து வெற்றி பெற்றதை சாதனையாக தி.மு.க. அரசு கூறியது. துறை சார்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ வந்து குறைய கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். நாம் ஒரு சிறிய கூட்டம் என்று நம்மை புறம் தள்ளுகிறார்கள். இதைக் கண்டு நீங்கள் சோர்ந்து விடக்கூடாது.

நீங்கள் நினைத்தது நடக்கும் வரை போராட வேண்டும். இது உங்கள் போராட்டம் இல்லை. என்னுடைய போராட்டம். இந்த அரசு முதலில் சான்றிதழ் வழங்கி விட்டு சமூக நீதி பற்றி பேச வேண்டும். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் நாளைக்கு வீதிக்கு வருவார்கள். இன்று வீதியில் இருக்கும் நீங்கள் ஒருநாள் ஆட்சி அதிகாரத்தில் அமர்வீர்கள்.

மாவட்ட கலெக்டருக்கு அன்பாக கோரிக்கை வைக்கின்றோம், பசியும், பட்டினியுமாக போராடுபவர்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு, இன்று போராடி கொண்டிருக்கும் உங்களை தேடி வருவார்கள். நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை அனைவரும் இணைந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

திட்டமிட்டு பரப்புகின்றனர்

பின்னர் அவர் அளித்த பேட்டியில் குறவன் இன மக்கள் கடந்த 7 நாட்களாக பசியும் பட்டினியுமாக போராடிவரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு உடனடியாக சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது குறித்து ஏற்கனவே இரண்டு முறை அறிக்கை கொடுத்து உள்ளேன். தற்போது பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாகவும் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.

இது குறித்து நடவடிக்கை இல்லை என்றால் துறை சார்ந்த அமைச்சரை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை தி.மு.க.வும், காங்கிரசும் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தை மக்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அப்போது நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com