வடமாநில வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது

ஈரோட்டில் வடமாநில வாலிபரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமாநில வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
Published on

ஈரோடு,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (வயது 23). இவருடைய மனைவி சசிகலா (22). இவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோடு வில்லரசம்பட்டியில் தங்கி இருந்து சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரெயிலில் பீகார் சென்றனர். அப்போது இவர்களுக்கு பீகாரை சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் அறிமுகம் ஆனார். நிதிஷ்குமார் திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கி தண்ணீர் சுத்தப்படுத்தப்படும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

ரூ.1 லட்சம்

அப்போது நவீன்குமார், நிதிஷ்குமாரிடம் ஈரோட்டுக்கு வந்தால் நாங்கள் நல்ல வேலை வாங்கி தருகிறோம். அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர் நவீன்குமாரின் பேச்சை கேட்டு நிதிஷ்குமார் ஈரோடு வந்தார்.

ஆனால் நிதிஷ்குமாருக்கு வேலை எதுவும் வாங்கி கொடுக்காமல், அசாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் தத்தாவுடன் சேர்ந்து நிதிஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் அதை வீடியோ காட்சிகளாக வாட்ஸ்-அப் மூலம் அவருடைய தாய்க்கு அனுப்பி வைத்து, ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இது குறித்து நிதிஷ்குமாரின் தாய் இதுபற்றி வேடசந்தூர் குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அவரது தாயாருக்கு செல்போனுக்கு வந்த வாட்ஸ்-அப் எண்ணை துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையில் அந்த செல்போன் எண் சிக்னல் ஈரோடு பகுதியை காட்டியதால் குஜிலியம்பாறை போலீசார் ஈரோடு விரைந்தனர். பின்னர் போலீசார் ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு ரத்தக்கறை படிந்திருந்ததை பார்த்த போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

துண்டு துண்டாக...

இதையடுத்து அந்த வீட்டில் சோதனை நடத்திய போது, அங்கு கிடந்த சாக்கு மூட்டைக்குள் கை, கால், உடல் என துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் நிதிஷ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நிதிஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவரது தாயை மிரட்டியும் பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கணவன்-மனைவி உள்பட 3 பேரும் சேர்ந்து நிதிஷ்குமாரை நேற்று முன்தினம் இரவு கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அதை மூட்டையில் கட்டி வைத்திருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் நவீன்குமாரையும் அவரது மனைவி சசிகலாவையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தலைமறைவான ராகுல் தத்தாவை போலீசார் கருங்கல்பாளையம் பகுதியில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com