ஸ்கிம்மர் கருவியால் தகவல்கள் திருட்டு போவதை தடுக்க: வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க புதிய நடைமுறை

ஸ்கிம்மர் கருவி மூலம் தகவல்கள் திருட்டு போவதை தடுக்க வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி செல்போனில் வரும் ரகசிய எண்ணை பதிவு செய்தால் தான் பணம் கிடைக்கும்.
ஸ்கிம்மர் கருவியால் தகவல்கள் திருட்டு போவதை தடுக்க: வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க புதிய நடைமுறை
Published on

கோவை,

வங்கி ஏ.டி.எம். மையங்களில் மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தி அதன் மூலம் ஏ.டி.எம். கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டு வந்தன. அதைக் கொண்டு மோசடி ஆசாமிகள் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து மைக்ரோ கேமரா மூலம் பதிவாகும் பின் நம்பரை வைத்து மற்றவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் அபேஸ் செய்து வந்தனர்.

இந்த மோசடியை தடுப்பதற்காக அனைத்து வங்கிகளும் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் சிப் உள்ள ஏ.டி.எம். கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்தன. இதனால் சிப் கார்டுகளில் இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிப்பது சற்று கடினம். இந்த நிலையில் ஏ.டி.எம். கார்டுகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கனரா வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதற்கு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி கனரா வங்கி ஏ.டி.எம்.மில் அந்த வங்கியின் ஏ.டி.எம். கார்டுகளை சொருகி பின் நம்பர் மற்றும் எவ்வளவு பணம் வேண்டும் என்பதை பதிவு செய்த பின்னர் வங்கி கணக்கில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வரும். அதில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ரகசிய எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த எண்ணை ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவு செய்த பின்னர் தான் பணம் வெளியே வரும். அந்த ரகசிய எண்ணை பதிவு செய்யாவிட்டால் பணம் கிடைக்காது. முன்பு செல்போனில் வரும் ரகசிய எண்ணை பதிவு செய்யும் நடைமுறை கிடையாது. இதுகுறித்து கனரா வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி செய்வதை தடுப்பதற்காக செல்போனில் வரும் ரகசிய எண்ணை பதிவு செய்யும் முறை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டும் தான் ரகசிய எண் செல்போனில் வரும். மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம். கார்டுகளின் தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்தாலும், வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு வரும் ரகசிய எண் மோசடி ஆசாமிகளுக்கு கிடைக்காது. இதனால் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்தாலும் அதைத் கொண்டு மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட முடியாது.

கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் அந்த வங்கியின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தினால் மட்டுமே ரகசிய எண் செல்போனில் வரும். ஆனால் மற்ற வங்கி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தினால் செல்போனில் ரகசிய எண் வராது. இந்த நடைமுறை மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் திருட்டு போவது தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com