வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள்

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து, தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்தல் செய்துவரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 30-6-2022 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 30-9-2022 அன்று உச்ச வயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும் மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரம் மிகைப்படாமல் இருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து 30-6-2022 தேதியில் ஒரு ஆண்டு முடிவுற்றிருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயதுவரம்பு மற்றும் வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை).

படிப்பவர்களாக இருக்கக்கூடாது

பொதுப்பிரிவு பதிவுதாரர்களைப் பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம், பிளஸ் -2 தேர்ச்சிக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராகவே இருக்க வேண்டும். மேலும் அரசிடமிருந்து வேறு எந்தவகையிலும், எந்தவிதமான உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல்கூடாது. கல்வி நிறுவனத்துக்கு தினமும் சென்று படிக்கும் மாணவ- மாணவியாக இருக்கக்கூடாது.

சுய உறுதிமொழி ஆவணம்

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களும் நிவாரணம் பெற இயலாது.

மேற்கண்ட தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ், மாற்றுக் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வருகைதந்து விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரையில் 10 ஆண்டுகள்) சுயஉறுதிமொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com