மத்திய மந்திரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி இன்று லாரிகள் வேலை நிறுத்தம்

மத்திய மந்திரியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து திட்டமிட்டபடி லாரிகள் வேலை நிறுத்தம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது.
மத்திய மந்திரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி இன்று லாரிகள் வேலை நிறுத்தம்
Published on

நாமக்கல்,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்துவது. மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் மற்றும் சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் கடந்த 15-ந்தேதி முதலே வடமாநிலங்களுக்கு சரக்கு முன்பதிவு செய்வதை நிறுத்திக் கொண்டது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது.

இதனால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கட்டுமான பொருட் கள், தீப்பெட்டி, ஜவ்வரிசி, மோட்டார் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தேக்கம் அடைய தொடங்கி உள்ளன. இதேபோல் வடமாநிலங்களில் இருந்து வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவையும் தடைபட்டுள்ளது.

இதற்கிடையே அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் திட்டமிட்டபடி லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் என அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

திட்டமிட்டபடி தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 32 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள், தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் முழுமையாக கலந்து கொள்கின்றன. டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வு காரணமாக பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களும் தங்களது சொந்த வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்து, வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

வடமாநிலங்களுக்கு கடந்த 15-ந் தேதி முதல் சரக்கு முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டதால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் சுமார் 15 ஆயிரம் லாரிகள், 16-ந் தேதி முதலே நிறுத்தப்பட்டு விட்டன. நாளை (இன்று) முதல் அனைத்து பகுதிகளிலும் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கும். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தத்தை கைவிட மாட்டோம். இதன் காரணமாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.250 கோடி இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் இன்று (நேற்று) மாலை மத்திய மந்திரி நிதின் கட்காரி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு 3 மாத கால அவகாசம் கேட்டார். நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. திட்டமிட்டபடி நாளை (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் கண்டிப்பாக நடக்கும். காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், வேன்கள் ஓடாது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் கனரக வாகனங்களும், 1 லட்சம் மினி வேன்களும் இயங்காது.

இந்த வேலைநிறுத்தத்தில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கு பெறுவதாக அறிவித்து விட்டனர். மத்திய அரசு உடனடியாக எங்களை அழைத்து கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு காண வேண்டும். அதுவரை எங்களுடைய வேலைநிறுத்தம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நேற்று நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள வடமாநிலம் செல்லும் லாரிகளில் வேலைநிறுத்தம் தொடர்பான நோட்டீசுகளை சங்க நிர்வாகிகள் ஒட்டினர். டிரைவர்களிடம் லாரிகளை இயக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com