

சென்னை,
தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் இல்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திக்கேயன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது ஆஜரான அரசு வக்கீல், சென்னை மாநகர பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களிலும் பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதற்கு நீதிபதிகள், அரசு பஸ்களை ஒரு துறை இயக்குகிறது. பஸ் நிறுத்தங்களை மற்றொரு துறை பராமரிக்கிறது. போக்குவரத்து சிக்னல்களை வேறொரு துறை நிர்வகிக்கிறது. இதனால் தமிழக அரசுக்கு இடது கை என்ன செய்கிறது என்பது வலது கைக்கு தெரிவதில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து இந்த ஐகோர்ட்டு ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அந்த வசதிகளை செய்து கொடுத்து விட்டதாக அரசும் ஏராளமான அறிக்கைகளை தாக்கல் செய்கின்றன. ஆனாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பது இல்லை.
அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் செய்துக் கொடுக்க வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் உள்ளன. தமிழகத்தில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்ற எண்ணிக்கைக்கூட தமிழக அரசிடம் இல்லை என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறைச் செயலாளர் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை 4 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இதேபோல, ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் என்ன? என்பது குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் விரிவான பதிலை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.