மழை பாதிப்பால் ரெயில்கள் தாமதம்: சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்

சென்னையில் நேற்று பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநிலம் செல்லும் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மழை பாதிப்பால் ரெயில்கள் தாமதம்: சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
Published on

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ரெயில் நிலையங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் ரெயில் சேவையில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நேற்று காலை வந்த அனைத்து ரெயில்களும் 2 முதல் 3 மணி நேரம் வரை தாமதமாகவே வந்து சேர்ந்தன. மேலும் மழையால் மின்சார ரெயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திலும் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு ரெயில்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என கூறப்பட்டது. இருந்தபோதிலும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ரெயில்களை இயக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டனர். ரெயில்களை வழக்கமான நேரங்களைவிட தாமதமாக இயக்கவும், சில ரெயில்களை அருகில் உள்ள பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கவும் முடிவு செய்தனர்.

ரெயில்கள் தாமதம்

இதையடுத்து மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் டெல்லி, மங்களுரூ, ஜெய்ப்பூர், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கமான நேரத்தைவிட தாமதமாக புறப்பட்டன. மேலும் மங்களுரூ, ஐதராபாத், ஹவுரா, லோக்மானியா திலக், பெங்களுரூ ஆகிய ஊர்களுக்குச் செல்லும் ரெயில்கள் வேறு ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டன. பயணிகளுக்கு இந்த ரெயில் மாற்றம் குறித்து முறையான தகவல்கள் கிடைக்காததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ரெயில் புறப்படும் இடம் தெரியாமல் பலர் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது, புறப்படும் ரெயில் நிலையம் மாற்றப்பட்டிருந்ததால், ரெயில்வே அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பல பயணிகள் ரெயில் தாமதமாக இயக்கப்படுவது தெரியாததால் ரெயில் நிலையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com