நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்தக்கோரி கோட்டை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் கைது

நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்தக்கோரி கோட்டையை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்தக்கோரி கோட்டை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் கைது
Published on

சென்னை,

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஆதார விலை ரூ.2,500 ஆக உயர்த்தக்கோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், இறந்தவர் போல் நடித்த ஒரு விவசாயியை வைத்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

பின்னர் கோட்டையை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்து பேரணியை தொடர்ந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 100 விவசாயிகளை கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குழு பிரதிநிதிகளை வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி நேரில் அழைத்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். முன்னதாக பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடிக்கணக்கில் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிகளை தள்ளுபடி செய்கிறது. ஆனால், நெல்லுக்கும், கரும்புக்கும் விவசாயிகள் கேட்கும் விலையை கொடுக்க மறுக்கிறது. தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியம் முழுமையாக கிடைப்பதில்லை. அதில் முறைகேடு நடைபெறுகிறது. எனவே தமிழக அரசு வழங்கும் மானியம் எங்களுக்கு வேண்டாம்.

மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஆதாரவிலையை ரூ.1,905-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 80 சதவீத விவசாயிகள் வாக்களித்ததன் மூலம் தான் மத்திய அரசு ஆட்சி அமைத்துள்ளது. விவசாயிகளை அழித்தால் பொருளாதாரம் வளராது என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com