

திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 70 அடி ஆழத்துக்கு சென்றது. பின்னர், 85 அடியில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் 100 அடிக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி 26 மணி நேரம் கடந்துவிட்டது. குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது
ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலத்திற்கு 90 அடிக்கு மற்றொரு குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழி தோண்டி குழந்தையை மீட்க 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று தீ அணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் தெரிவித்துள்ளார். என்.எல்.சியின் சுரங்கம் தோண்டும் கருவி மூலம் குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் விழுந்தான். கடந்த 26 மணி நேரத்திற்கும் மேலாகியும் மீட்பு பணி பலன் கொடுக்காதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.