உதயநிதி ஸ்டாலின் மந்திரியாக, முதல்-அமைச்சராக வரவேண்டும்...! ஐ.பெரியசாமி மருமகள் பதிவால் பரபரப்பு

உதயநிதி ஸ்டாலின் மந்திரியாக, முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்: ஐ.பெரியசாமி மருமகள் பதிவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் மந்திரியாக, முதல்-அமைச்சராக வரவேண்டும்...! ஐ.பெரியசாமி மருமகள் பதிவால் பரபரப்பு
Published on

திண்டுக்கல்:

தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முப்பெருந்துறையில் அமைச்சராக பதவி வகித்தார்.

தற்போது கூட்டுறவுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறை குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டார்.

இதனையடுத்து ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறையில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கமாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது.

பெரும்பாலான அமைச்சர்கள் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக பதிவு செய்த கருத்துகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் உதயநிதி ஸ்டாலின் குறித்து எந்த கருத்துகள் தெரிவித்தாலும் புன்னகையோடு கடந்து செல்வார். எந்தவித பந்தா இல்லாத மிக எளிமையான மனிதர். உங்களை போலவே உங்கள் மனைவியும் மிகவும் எளிமையானவர்.

திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் உங்களுடன் புகைப்படம் எடுக்க ஆசையாக ஓடி வருவோம். அப்போது அன்புடன் அழைத்து உபசரிப்பீர்கள். எங்கள் மகனுக்கு ஆதவன் என தலைவர் பெயர் சூட்டினார்.

ஆதவன் சென்னைக்கு வருவதே உங்களை பார்க்கத்தான், கொரோனா காலத்தின்போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும், தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான்.

குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது. கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும்.

நீங்கள் இந்த நாட்டின் மந்திரியாக வேண்டும் ! வருங்காலத்தில் முதலமைச்சர் ஆக வேண்டும் !என்பதெல்லாம் எங்கள் கனவு ,லட்சியம் ,ஆசை ! இவையெல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக நடந்தேயாகும்!

உங்கள் உழைப்புக்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் தொழிலையும் ஆசிர்வதிப்பாராக !

உங்கள் தங்கைகள் நாங்கள் எல்லோரும் என்பதில் எங்களுக்கு எப்போதுமே பெருமை தான் …….

என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவை கட்சியினர் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com