'நீட்' தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. சார்பில் சட்ட போராட்டம் தொடரும்; அரியலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

‘நீட்’ தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. சார்பில் சட்ட போராட்டம் தொடரும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
'நீட்' தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. சார்பில் சட்ட போராட்டம் தொடரும்; அரியலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Published on

மருத்துவ சேவைகள்

அரியலூரில் கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் இருந்து கார் மூலம் அரியலூருக்கு நேற்று காலை வந்தார்.

இதைத்தாடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 தளங்களை கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்வேறு மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவினை தொடங்கி வைத்து, அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்பு சிகிச்சை பிரிவினை திறந்து வைத்து, இப்பிரிவில் உள்ள அதிதீவிர மருத்துவ சிகிச்சை பிரிவினை பார்வையிட்டு மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

நீட் தேர்வு ரகசியம்

இதையடுத்து விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக அரியலூருக்கு வருகை புரிந்துள்ளேன். நான் தேர்தல் பிரசாரத்தில் 'நீட்' தேர்வு ரகசியம் என்று குறிப்பிட்டதை, தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அது என்ன? என்று ஒவ்வொரு மேடைகளிலும் விமர்சித்து வருகிறார். நான் தேர்தல் பிரசாரத்தில் கூறியது போலவே, சட்டமன்றத்தில் நான் பேசிய முதல் கன்னிப்பேச்சில் 'நீட்' தேர்வை எதிர்த்து போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் பெயரில் அரங்கம் அமைக்க வேண்டும் என்று பேசினேன்.

தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு சகோதரி அனிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. இதை பார்க்கும்போதெல்லாம் 'நீட்' தேர்வுக்காக நாம் போராடுவது நினைவிற்கு வரும். அண்மையில் பிரதமரை சந்தித்தபோது நான் முதலில் வைத்த கோரிக்கை 'நீட்' தேர்வு ரத்து என்பதுதான். அதற்கு பிரதமர் மோடி 'நீட்' தேர்வு தேவைக்கான அவசியங்களை எடுத்து கூறினார்.

சட்ட போராட்டம் தொடரும்

ஆனால் நான் மற்றும் தமிழகத்தில் மாணவர்கள் 'நீட்' தேர்வை ஏற்கவில்லை. 'நீட்' தேர்வை ரத்து செய்யும் வரை சட்ட போராட்டத்தினை தி.மு.க. தொடரும் என்று கூறிவிட்டு வந்துள்ளேன். 'நீட்' தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. சார்பில் சட்ட போராட்டம் தொடரும் என்பது எனது 'நீட்' தேர்வின் ரகசியம். தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பஸ் பயணத்தில் 250 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுமை பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

அதேபோல், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி காட்டி விட்டார். தற்போது இந்தியாவில் வளர்கின்ற மாநிலங்களிலேயே நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு என்று பெருமையை பெற்று தந்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அனிதா நினைவு அரங்கம்

அதனை தொடர்ந்து அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பயிலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டு அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், ஆய்வக உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார். இதையடுத்து அவர் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 250 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு 'அனிதா நினைவு அரங்கம்' என்று பெயர் சூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு 'அனிதா நினைவு அரங்கம்' என்று பெயர் பொறித்த பலகையினை திறந்து வைத்து, அரங்கினை பார்வையிட்டார்.

அமைச்சர்கள்

இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலாளர் செந்தில்குமார், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தொல்.திருமாவளவன் எம்.பி., மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர், எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் முத்துகிருஷ்ணன், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், கவுன்சிலர் ஆர்.பி.சத்யன், எல்.கே.அருண்ராஜா, அரியலூர் நகர தி.மு.க. செயலாளர் முருகேசன், செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் பூ.செல்வராஜ், இந்திய மருத்துவ சங்க அரியலூர் கிளை பொறுப்பாளர்கள் டாக்டர்கள் ரமேஷ், கண்மணி, கொளஞ்சிநாதன், சரவணன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குன்னத்தில் புதிய பஸ் நிறுத்தம்-நூலகம்

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரியலூரில் இருந்து காரில் புறப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்திற்கு நேற்று மதியம் வந்தார். அங்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சிவசங்கர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிறுத்தத்தை பயணிகள் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருமாவளவன் எம்.பி. ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி பார்வையிட்டு, கல்வெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அமைச்சர் சிவசங்கரின் சொந்த நிதியில் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் போட்டித்தேர்வு நூலகத்தையும், படிப்பகத்தையும் திறந்து வைத்தார். அங்கு பயின்றவர்களிடம் கலந்துரையாடி செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டார்.

தேர்வு எழுதாதவர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குன்னம் தாலுகா, ஒதியத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முதல்-அமைச்சரிடம் கூறியிருக்கிறார். பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரியை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வின் முதல் நாள் தேர்வை எழுதாத சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து தமிழக அரசு, மாணவர்கள் அதிகமாக பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறை சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் திறந்த காரில் ஏறி நின்றபடி, சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் தஞ்சை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com