துணைவேந்தர் நியமன குற்றச்சாட்டு: "அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

துணைவேந்தர் நியமன குற்றச்சாட்டில் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
துணைவேந்தர் நியமன குற்றச்சாட்டு: "அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்றைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றிய காலத்தில் (அன்றைய அதிமுக ஆட்சியில்) தமிழ்நாட்டில் உள்ள பல்கலை கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் பெருமளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளார்.

ரூ.40/ 50 கோடி என பணம் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்பட்டதாகவும், அக்காலத்தில் 27 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதன்படி துணைவேந்தர் நியமனங்களில் மட்டும் ரூ. 1500 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்பதோடு, துணைவேந்தர் நியமனங்கள் மட்டுமல்லாது ஆசிரியர் நியமனங்களிலும் பல்லாயிரம் கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

ஆளுநராக இருந்த ஒருவரே முன்வைத்திருக்கும் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இது குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை தற்போது பகிரங்கமாக தெரிவித்துள்ள பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது அதை ஏன் தடுக்காமல் அமைதி காத்தார் எனும் கேள்வியும் இயல்பாக எழுகிறது.

எனவே, ஆளுநரும் முறைகேட்டிற்கு அப்பாற்பட்டவரல்ல என்றே கருத வேண்டியுள்ளது. அன்றைய அதிமுக அரசில் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் உள்ளிட்ட பணி நியமனங்களை மேற்கொண்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com