டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க மக்கள் செய்ய வேண்டியது என்ன?

பருவமழை தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க மக்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பருவமழை தொடங்க இருப்பதால் மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி, அதன்மூலம் ஏற்படும் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், டெங்கு காய்ச்சல் பொதுமக்களுக்கு வராமல் பாதுகாத்து கொள்ளவும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
டெங்கு காய்ச்சல், ஏடிஸ் என்னும் கொசு கடிப்பதால் பரவுகிறது. இந்த கொசுவானது சுத்தமான நீரில் வீட்டில் பயன்படுத்தும் நீர் கலன்களிலும், வீட்டை சுற்றி இருக்கும் தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்படாத டயர்கள், உடைந்த பானைகளில் காணப்படும் மழைநீரிலும் உற்பத்தியாகிறது.
கொசு உற்பத்தியை கட்டுப்படுத்திட ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தும் அனைத்து நீர் வைத்திருக்கும் கலன்களை மூடி வைக்க வேண்டும். வீட்டில் உள்ள மேல்நிலைத்தொட்டி மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் உள்ள நீரினை கொசு புகாவண்ணம் மூடி வைப்பதுடன் வாரம் ஒரு முறை பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்பும் தொடர்ந்து நீர் இல்லா வண்ணம் பராமரிக்க வேண்டும். வீட்டை சுற்றி தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்படாத டயர்கள், உடைந்த பானைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க அப்புறப்படுத்த வேண்டும்.
வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளில் திரைச்சீலைகள் மற்றும் கொசு வலைகளை கொண்டு கொசுக்கள் வீட்டிற்குள் வருவதை தடுக்க வேண்டும். வீட்டை சுற்றி உள்ள செடிகள், புதர்களை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வதுடன் மழைநீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.
கொசு ஒழிப்பு பணியாளர்கள் தங்கள் வீட்டிற்கு வரும்போது முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டில் யாரேனும் காய்ச்சல் பாதிப்பு அடைந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரை அணுகி ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






