மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன? - அமைச்சர் விளக்கம்

மாண்டஸ் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன? - அமைச்சர் விளக்கம்
Published on

சென்னை,

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது.

மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. சென்னையில் சுமார் 694 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டனர்.

புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மாண்டஸ் புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மீனவர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை. புயலால் 40 இயந்திர படகுகள்,160 வலைகள் சேதமடைந்துள்ளது.

694 மரங்கள் சாய்ந்துள்ளன. புயலால் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. 216 இடங்களில் நிவாரண மையம் அமைக்கப்பட்டிருந்தன. 10,743 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாண்டஸ் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com