பஸ் ஓட்டும்போது திடீர் நெஞ்சு வலி; டிரைவர் சாவு சாதுர்யமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்

பஸ் ஓட்டும்போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் டிரைவர் இறந்தார். சாதுர்யமாக அவர் பஸ்சை நிறுத்தியதால் 20 பயணிகள் உயிர் தப்பினார்கள்.
பஸ் ஓட்டும்போது திடீர் நெஞ்சு வலி; டிரைவர் சாவு சாதுர்யமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே மணியன்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கவுந்தப்பாடி கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார். செல்வராஜ் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவர் கவுந்தப்பாடியில் இருந்து பெருந்துறை செல்ல வேண்டிய அரசு டவுன் பஸ்சை இயக்கினார். அந்த பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெருந்துறை நோக்கி செல்வராஜ் ஓட்டிச்சென்றார்.

கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோவில் பகுதியில் காலை 7.50 மணிஅளவில் பஸ் சென்றது. அங்கு பயணிகளை இறக்கி ஏற்றிய பிறகு பஸ் புறப்பட தயாரானது. அந்த பஸ்சில் 15 பெண்கள் உள்பட 20 பேர் இருந்தனர். பஸ்சை மீண்டும் இயக்கியபோது டிரைவர் செல்வராஜூக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக சாதுர்யமாக செயல்பட்ட அவர் பஸ்சை பிரேக் போட்டு நிறுத்தினார். பிறகு அவர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் சபாபதி மற்றும் பயணிகள் உடனடியாக செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக சிறுவலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

டிரைவர் செல்வராஜூக்கு நெஞ்சு வலி ஏற்பட்டபோது அவர் உடனடியாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தியதால் கண்டக்டர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இல்லை என்றால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com