“எங்கே சென்றாலும் தேடி வருகிறீர்களே?” - சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுவை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்கள்


“எங்கே சென்றாலும் தேடி வருகிறீர்களே?” - சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுவை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்கள்
x

சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி


நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு கருணைராஜ், போலீஸ்காரர் குருமகேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி பொன்னாக்குடி அருகில் சென்றனர். அங்கு சாலையோரமாக மோட்டார் சைக்கிளின் அருகில் நின்ற 2 வாலிபர்கள் கைகளில் பெரிய அரிவாள்களை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் அருகில் போலீசார் சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் போலீசாரை நோக்கி, ‘‘எங்கே சென்றாலும் தேடி வருகிறீர்களே?’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு போலீசார், ‘‘அரிவாள்களுடன் நின்று எதற்காக பொதுமக்களை அச்சுறுத்துகிறீர்கள்?’’ என்று வாலிபர்களிடம் தட்டிக்கேட்டனர். உடனே வாலிபர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். வாலிபர்களில் ஒருவர் திடீரென்று அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனை வெட்ட முயன்றார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் விலகியதால் உயிர் தப்பினார்.

தொடர்ந்து மற்றொரு வாலிபரும் போலீஸ் ஏட்டு கருணைராஜை அரிவாளால் வெட்ட முயன்றார். உடனே ஏட்டு விலகியதால் தப்பினார். அந்த வாலிபர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றது நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்த வான் மகேஷ் (வயது 25), உத்தமபாண்டியன்குளத்தைச் சேர்ந்த சூர்யா (20) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

1 More update

Next Story