

பாக்தாத்,
ஈராக் நாட்டில் மொசூல் உள்ளிட்ட நகரங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வந்தது. கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் அந்நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், நகர்ப்புற பகுதிகளிலோ அல்லது பாலைவன பகுதிகளிலோ மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து காணப்படும் மீதமுள்ள ஐ.எஸ். அமைப்பினர் அடிக்கடி, பாதுகாப்பு படையினர் மற்றும் குடிமக்கள் மீது கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நைனிவே மாகாணத்தின் தலைநகர் மொசூல் நகரின் மேற்கே 100 கி.மீ. தொலைவில் கிராமம் ஒன்றில் வெடிகுண்டு ஒன்று கிடந்துள்ளது. அதனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டு சென்றிருக்க கூடும் என கூறப்படுகிறது. அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர்.
ஆனால், திடீரென அந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் படை வீரர்கள் 6 பேர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 2 வீரர்கள் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.