முழு வாழ்வையும் மக்களுக்காக செலவிட்டவர் - கமலா ஹாரிசுக்கு ஒபாமா புகழாரம்


முழு வாழ்வையும் மக்களுக்காக செலவிட்டவர் - கமலா ஹாரிசுக்கு  ஒபாமா புகழாரம்
x
தினத்தந்தி 21 Aug 2024 10:48 AM IST (Updated: 21 Aug 2024 11:04 AM IST)
t-max-icont-min-icon

ஜனநாயக கட்சியின் 2-ம் நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஒரு புதிய அத்தியாயத்திற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது என்றார்.

நியூயார்க்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதனை காண்பதற்காக அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்படுவார். இதேபோன்று, துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மின்னசோட்டா கவர்னர் டிம் வால்சும் முறைப்படி வேட்பாளராக இந்த மாநாட்டில் அறிவிக்கப்படுவார்.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்று பேசிய கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். அவருக்கு நாங்கள் எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்போம் என கூறினார். முதல் நாளில், கமலாவுக்கு ஆதரவாக, அமெரிக்க கூடைப்பந்து போட்டியின் பயிற்சியாளர் ஸ்டீவ் கெர், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோர் பேசினர்.

இதனை தொடர்ந்து, 2-ம் நாள் மாநாடு இன்று நடந்தது. இதில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கமலா ஹாரிஸ் தனக்கு நம்பிக்கையை தருகிறார் என கூட்டத்தினரின் முன் கூறினார்.

தொடர்ந்து அவர், மக்களுக்கு முழு வாழ்வையும் செலவிட்ட ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. நான் கடந்த காலங்களை திரும்பி பார்க்கிறேன். என்னுடைய முதல், பெரிய முடிவு சிறந்த ஒன்றாக இருந்தது. அது, என்னுடைய துணை அதிபராக பணியாற்ற ஜோ பைடனை கேட்டு கொண்டேன்.

ஒரு திறமையான அதிபராக பைடனை வரலாறு நினைவுகூரும். அவரை என்னுடைய அதிபராக அழைப்பதிலும், என்னுடைய நண்பராக அழைப்பதிலும் நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

அவர் கமலா ஹாரிசை பற்றி பேசும்போது, ஒரு புதிய அத்தியாயத்திற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. கமலா ஹாரிசுக்காக நாங்கள் தயாராகி வருகிறோம். அவர் அதிபர் பணிக்கு தயாராக இருக்கிறார்.

அவர், தன்னுடைய விவகாரங்களை விட உங்கள் மீது அதிக கவனம் செலுத்துபவராக இருப்பார். நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் மீது உண்மையான கவனம் செலுத்தும் ஓர் அதிபர் நமக்கு தேவையாக இருக்கிறார். அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிபர் ஒருவர் நமக்கு தேவை.

சிறந்த ஊதியத்திற்காக பேசுபவராக இருப்பவர் தேவை. அந்த அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பார். அவரால் முடியும் என பேசியுள்ளார்.

1 More update

Next Story