கொரோனா நிவாரண சேவை: இந்திய சிறுமிக்கு டிரம்ப் கவுரவம்

கொரோனா நிவாரண சேவையை பாராட்டும் விதமாக, இந்திய சிறுமியை அழைத்து டிரம்ப் கவுரவப்படுத்தினார்.
கொரோனா நிவாரண சேவை: இந்திய சிறுமிக்கு டிரம்ப் கவுரவம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும், இந்த கொடிய வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நெருக்கடி சமயத்தில் கொடை உள்ளத்துடன் முன்நின்று உதவிகளை செய்யும் அமெரிக்க கதாநாயகர்கள் பலரை ஜனாதிபதி டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று கவுரவப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்திய வம்சாவளியை சேர்ந்த சரவ்யா அண்ணப்பரெட்டி என்ற 10 வயது சிறுமியை டிரம்ப் கவுரவப்படுத்தினார். மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் சரவ்யா அண்ணப்பரெட்டி சக மாணவிகளுடன் சேர்ந்து, உள்ளூர் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கினார்.

மேலும் 200-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து அட்டைகளை அனுப்பினார். இந்த சிறிய வயதில் சரவ்யா அண்ணப்பரெட்டிக்கு இருக்கும் கொடை உள்ளத்தை பாராட்டும் விதமாக ஜனாதிபதி டிரம்ப், அவரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து கவுரவப்படுத்தினார்.

சரவ்யா அண்ணப்பரெட்டியின் பெற்றோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com