

வாஷிங்டன்,
அமெரிக்காவில் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் சேர்ந்து தயாரித்துள்ள தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசி போடும் பணி அங்கு தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், 61 வயதான அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சுக்கு வாஷிங்டன் ஐசனோவர் நிர்வாக அலுவலக கட்டிடத்தில், வால்டர் ரீட் தேசிய ராணுவ ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ பணியாளர் நேற்று காலை தடுப்பூசி செலுத்தினார்.
இதன்மூலம் முதன்முதலாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உலகின் மிக உயர்ந்த தலைவர் என்ற பெயரை அவர் பெற்றார். அவரது மனைவி கரேன் மற்றும் நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி ஜெரோம் ஆடம்ஸ் ஆகியோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது நேரடியாக டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. அடுத்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, செனட் சபை பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கன்னல் அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.