ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 355 ஆக உயர்வு

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 355 ஆக உயர்ந்து உள்ளது.
ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 355 ஆக உயர்வு
Published on

யோகோஹமா,

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த 3 ஆயிரத்து 711 பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இதில் 132 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கப்பலில் பணியாற்றும் மேலும் ஓர் இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டு சுகாதார துறை மந்திரி கட்டோ கூறும்பொழுது, இதுவரை 1,219 தனிநபரிடம் நாங்கள் பரிசோதனை மேற்கொண்டோம். இவற்றில் 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்குரிய விசயங்களை பற்றி நாம் இப்பொழுது சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கப்பலில் 70 வயதிற்கு மேற்பட்ட பயணிகளிடம் நேற்று பரிசோதனை நடத்தப்பட்டது. நல்ல ஆரோக்கியமுடன் இருப்பவர்கள் வருகிற புதன்கிழமை கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

இளம் பயணிகளுக்கு இன்று பரிசோதனை நடத்தப்பட கூடும் என கூறப்படுகிறது. நல்ல உடல்நிலையில் உள்ளவர்கள் வருகிற புதன்கிழமை கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

வேறு யாருக்கும் புதிய பாதிப்புகள் ஏற்படுகின்றனவா என கண்டறியும் பணியில் ஜப்பானிய அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில், ஜப்பானில் 53 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில், சீனாவின் உகான் நகரில் இருந்து இடம்பெயர்ந்த ஜப்பானியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களும் அடங்குவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com