ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை: இந்தியாவில் இருந்து கோதுமை அனுப்ப ஐ.நா. கோரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு தேவையான கோதுமையை இந்தியாவில் இருந்து பெற இந்திய அரசுடன் ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை: இந்தியாவில் இருந்து கோதுமை அனுப்ப ஐ.நா. கோரிக்கை
Published on

காபுல்,

தலீபான்களின் முழு கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான், கடுமையான பொருளாதார நெருக்கடியையும், உணவு தானியங்களின் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசுக்கு இதுவரை அளித்து வந்த நிதி உதவியை பன்னாட்டு அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளும் நிறுத்தி விட்டதால் அங்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சிகளினாலும், உள்நாட்டுப் போரினாலும் ஆப்கானிஸ்தானில் உணவு தானியங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பின் இயக்குனர் மேரி எலன் மெக்ரோட்டி கூறியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 75 ஆயிரம் டன் கோதுமையை நன்கொடையாக அளித்திருந்தது. இதை பாகிஸ்தான் வழியாக தரை மார்க்கமாக அனுப்ப அனுமதி கிடைக்காததால், கப்பல் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு சாலை மார்க்கமாக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது உணவு பஞ்சம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிடம் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு உணவு தானியங்களை நன்கொடை பெற இந்திய அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா.வின் மேரி எலன் மெக்ரோட்டி கூறியுள்ளார். இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் 25 லட்சம் டன் அளவிற்கு உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு 100 கோடி டாலர்கள் அளவுக்கு நிதி உதவி மற்றும் இதர உதவிகளை அளிக்க, கடந்த மாதம் ஐ.நா.வில் நடந்த கூட்டத்தில் பல்வேறு உலக நாடுகள் உறுதி அளித்தன. ஆனால் இவற்றை தலீபான்கள் மூலம் அனுப்பாமல், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நேரடியாக அனுப்ப உலக நாடுகள் விரும்புவதால், இதில் மேலும் சிக்கல்கள் தொடர்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com