உக்ரைன் போர்: புச்சா படுகொலைக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை வெளியேற்றும் ஜெர்மனி..!!

உக்ரைன் நாட்டின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை ஜெர்மனி வெளியேற்ற உள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வாரம் புச்சா நகரை உக்ரேனிய படைகள் மீண்டும் கைப்பற்றின. அந்நகரம் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த நகரத்திற்கு உக்ரேனியர்கள் யாரும் செல்ல முடியவில்லை.

இந்த சூழலில், புச்சா நகரில், 280 பேரின் உடல்களை பெரிய குழிகளில் ஒரே இடத்தில் போட்டு புதைத்து உள்ளோம் என்று மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறும்போது, புச்சா நகரில் ஒரு தெருவில் நேற்று 20 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் அனைவரும் தலையின் பின்புறத்தில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். பலியானவர்களில் ஆண்களும், பெண்களும் இருந்தனர். அவர்களில் 14 வயது சிறுவனும் இருந்துள்ளான் என்று பெடோருக் கூறினார்.

கொல்லப்பட்டவர்களில் சிலர் புச்சாங்கா ஆற்றை கடந்து உக்ரேனிய கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல முயன்றபோது கொல்லப்பட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை ஜெர்மனி வெளியேற்ற உள்ளது. இதன்படி அவர்கள் 5 நாட்களுக்குள் ஜெர்மனியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் கூறுகையில், நமது சுதந்திரத்திற்காக எழுந்து நிற்பதும், அதைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதும் அவசியம். அதனால்தான் நமது சுதந்திரத்திற்கு எதிராகவும், நமது சமூகத்தின் ஒற்றுமைக்கு எதிராகவும், ஒவ்வொரு நாளும் பணிபுரியும் ரஷிய தூதரகத்தின் கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்களை ஆளுமை இல்லாதவர்களாக அறிவிக்க ஜெர்மன் அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com