

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முஜாபராபாத் நகரில் அமைந்துள்ள கிராமம் ராஜ்பூர். இங்கு வசித்து வருபவர் உமர் வாடா. இவர் கடந்த 16ந்தேதி அஷ்பக் என்பவரின் டீன் ஏஜ் வயது நிறைந்த சகோதரியை கற்பழித்துள்ளார்.
இந்த வழக்கு கிராம பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது. அவர்கள் உமரின் சகோதரியை அஷ்பக் கற்பழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த முடிவுக்கு உமரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், குற்றவாளியின் சகோதரிக்கு இதேபோன்று நடந்தால் தான் நீதியாகும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் பற்றி கடந்த திங்கட்கிழமை வரை உமர் குடும்பத்தினர் போலீசில் தெரிவிக்கவில்லை. அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் அளித்த புகாரினை தொடர்ந்து போலீசார், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் 30 பேர், அஷ்பக் மற்றும் உமர் மீது தனித்தனியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.
உமரின் சகோதரி அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் முன்னால் கற்பழிக்கப்பட்டாரா? (புகாரில் தெரிவிக்கப்பட்டது) என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.
இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்வதற்கோ அல்லது எப்.ஐ.ஆர்.களை திரும்ப பெறுவதற்கோ வழி ஏற்படாத வகையில் முஜாபராபாத் போலீசாரும் புகார்தாரரில் ஒருவராக இந்த வழக்கில் உள்ளார்.
கற்பழிப்பு உத்தரவு பிறப்பித்த கிராம பஞ்சாயத்து தலைவர் உள்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு இதே மாவட்டத்தில் முக்தாரன் மாய் என்பவர் பஞ்சாயத்து தீர்ப்பின்படி கற்பழிக்கப்பட்டார். இது சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற எண்ணற்ற வழக்குகளில் புகார் அளிக்க யாரும் முன்வருவதில்லை. தங்களது குறைகளை போலீசாரிடம் புகாராக தெரிவிக்க பாதிக்கப்பட்ட பலர் முன்வராதது துரதிர்ஷ்டவசமுடையது என பெண்கள் உரிமை அமைப்பை சேர்ந்த அஸ்மா ஜெஹாங்கீர் தெரிவித்துள்ளார்.