

வாஷிங்டன்,
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சினையை தீவிரமாக டிரம்ப் கையாளவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், பொருளாதார பிரச்சினைகளை காரணம் காட்டி கடுமையான முழு முடக்க கட்டுப்பாடுகளை அமல்படுத்த டிரம்ப் மறுத்து வருகிறார்.
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினையும் தேர்தல் களத்தில் சூடுபிடித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் தவறிவிட்டதாக ஜனநாயக கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், பொருளாதாரத்தில் மட்டுமே டிரம்ப்பின் கவனம் இருப்பதாகவும், மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன், மருத்துவர்கள் பரிந்துரைத்தால் அமெரிக்காவில் முழுயாக கட்டுப்பாடுகளை (பொது முடக்கம்) கொண்டு வருவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மேலும், வைரசைக் கட்டுப்படுத்தாமல் நாம் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல முடியாது. மக்களின் வேலை வாய்ப்பு பிரச்சினைகலை தீர வேண்டும் என்றாலும் வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பது அவசியம் என்றார்.