ஜப்பானில் அடுத்தடுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கம்: பீதியில் உறைந்த மக்கள்

ஜப்பானில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
ஜப்பானில் அடுத்தடுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கம்: பீதியில் உறைந்த மக்கள்
Published on

டோக்கியோ,

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் உள்ள மியாசகியில் நேற்று காலை அடுத்தடுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கங்கள் தாக்கின.

முதலாவதாக உள்ளூர் நேரப்படி காலை 7.43 மணிக்கு ஹூயாகா கடல் பகுதியை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது.

இதில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மக்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு 8.43 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உறைந்தனர். இதற்கிடையில் 9.07 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.

தொடர்ச்சியாக 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதும், அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. அதே போல் இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை.

மேலும் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. அதே சமயம் நிலநடுக்கம் காரணமாக மியாசகி, குமமோடோ மற்றும் ககோசிமாவில் விமானங்கள் தாமதமானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com