

லாகூர்,
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரிப் (வயது 70) பிரதமராகி உள்ளார்.
அவரது தலைமையிலான அரசில் இடம்பெற உள்ள புதிய மந்திரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஷபாஸ் ஷெரிப்பின் பி.எம்.எல்-என் கட்சி மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளில் இருந்து மந்திரிகள் தேர்வாகி உள்ளனர். இவர்கள் நேற்று பதவியேற்க இருந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்விக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஒரு சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி ஆல்விக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதனை ஏற்று அவர் ஓய்வில் உள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் ஜனாதிபதிக்கான டுவிட்டர் பதிவு உறுதிப்படுத்தியது.
புதிய பிரதமராக ஷெரிப் பதவியேற்க உள்ள சூழலில், அந்நாட்டின் ஜனாதிபதி ஆல்வி, ஷெரிப்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழலில், புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அதிபர் ஆரிப் ஆல்வி மறுத்து விட்டார். இந்த நிகழ்வில் இருந்து அவர் விலகி கொண்டதால், புதிய மந்திரிசபை பதவியேற்கும் நிகழ்ச்சி தள்ளி போனது.
எனினும், தல்ஹா மஹ்மூத், சையத் அமினுல் ஹக், சையத் பைசல் அலி சப்ஜ்வாரி, முகமது இஸ்ரார் தரீன், நவாப்சதா ஷா ஜைன் புக்தி மற்றும் தாரிக் பஷீர் சீமா ஆகியோர் மத்திய மந்திரிகளாக பதவியேற்க ஏற்று கொள்ளப்பட்டனர்.
இதுதவிர, டாக்டர் ஆயிஷா கவுஸ் பாஷா, ஹினா ரப்பானி கர், அப்துல் ரகுமான் கான் கன்ஜோ ஆகியோரை மாநில அமைச்சர்களாக நியமிக்கவும் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதேபோன்று, கமர் ஜமான் கைரா, அமீர் முகம் மற்றும் ஆன் சவுத்ரி ஆகியோரை ஆலோசகர்களாக நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தலைமையிலான 31 மத்திய அமைச்சரவைக்கான மந்திரிகள் உள்பட 34 உறுப்பினர்களுக்கு பாகிஸ்தானின் அதிபர் (பொறுப்பு) சாதிக் சஞ்ராணி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதற்கு முன், பிரதமர் ஷபாஸ் ஷெரிப்புக்கும் சாதிக் பதவி பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பதவியேற்பு விழாவில் புனித குரான் ஓதப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய பிரதமர் ஷெரிப் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 31 மத்திய மந்திரிகள் மற்றும் 3 மாநில மந்திரிகள் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்.